கச்சிராயப்பாளையம் அருகே, மணல் கடத்திய ஊர்க்காவல் படை வீரர் உள்பட 4 பேர் கைது

கச்சிராயப்பாளையம் அருகே மணல் கடத்திய ஊர்க்காவல் படை வீரர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-09-20 22:30 GMT
கச்சிராயப்பாளையம், 

கச்சிராயப்பாளையம் அருகே கரடிசித்தூரில் உள்ள ஆற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி, சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் கரடிசித்தூர் ஆற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கும்பல் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி கடத்திக் கொண்டிருந்தது. போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓட முயன்றது. உடனே போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் கரடிசித்தூரை சேர்ந்த பச்சையாப்பிள்ளை மகன் இளங்கோவன் (வயது 39), கோவிந்தன் மகன் சிவக்குமார்(33), சர்க்கரை(55), கணேசன் மகன் ரவி(26) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமார் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். மேலும் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட 4 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.இதில் கைதான சிவக்குமார், கள்ளக்குறிச்சியில் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. மணல் கடத்தலை தடுக்க வேண்டிய ஊர்க்காவல் படை வீரரே, மணல் கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்