பயிர் கடன் பெற கிராம நிர்வாக அதிகாரி வழங்கும் அடங்கலை பயன்படுத்தலாம் - கலெக்டர் தகவல்

விவசாயிகள் பயிர் கடன் பெறுவதற்கு இ-அடங்கல் அல்லது கிராம நிர்வாக அதிகாரியிடம் இருந்து பெறப்பட்ட அடங்கலை பயன்படுத்திக்கொள்ளலாம் என விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் சிவஞானம் தெரிவித்தார்.

Update: 2019-09-20 22:45 GMT
விருதுநகர்,

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சிவஞானம் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி உதயகுமார், விவசாயத்துறை இணை இயக்குனர் அருணாசலம், கால்நடைபராமரிப்புத்துறை மண்டல இயக்குனர் அருணாச்சலகனி, கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் திலிப்குமார், கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் செந்தில்குமார் உள்பட அரசுத்துறை அதிகாரிகளும், விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், பயிர்கடன் பெறுவதற்கு கூட்டுறவு வங்கிகளில் இ-அடங்கல் தேவை என வலியுறுத்தும் நிலையில் சேவை மையங்களில் இருந்து இ-அடங்கல் பெற முடியாத நிலை உள்ளதால் பயிர்கடன் பெறுவதில் பிரச்சினைகள் உள்ளதாக புகார் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த கலெக்டர் சிவஞானம் விவசாயிகள் இணையதளம் மூலமும் செயலி மூலமும் தாங்களாகவே தங்கள் பயிர் பரப்பு விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம் எனவும், பயிர் கடன் பெற விரும்பும் விவசாயிகள் இ-அடங்கல் அல்லது கிராம நிர்வாக அதிகாரியிடம் இருந்து பெறப்பட்ட அடங்கலை கொண்டு பயிர் கடன் பெறலாம் என்றும் தெரிவித்தார்.

வாடியூர் பகுதியில் கண்மாய்களில் குடிமராமத்து பணிநடைபெறவில்லை என்றும், இது பற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தால் படம் வரைந்து கொண்டு வாருங்கள் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள், எங்களுக்கு படம் வரைய தெரியாத நிலையில் என்ன செய்ய முடியும் என்று விவசாயிகள் கேள்வி எழுப்பினர். மாவட்டம் முழுவதும் குடிமராமத்து பணிகள் நடைபெற்ற வரும் நிலையில் வாடியூர் கண்மாயிலும் மராமத்து பணிநடைபெற உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.

பொருளாதார மந்த நிலையால் தேங்காய், நெல், கரும்பு ஆகியவற்றை விற்பனை செய்த விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பணம் கிடைக்காதநிலை உள்ளதாகவும், மாவட்டத்தில் 25 ஆயிரம் எக்டேர் நிலப்பரப்பில் தென்னை விவசாயம் நடைபெறும் நிலையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.

மம்சாபுரம் பகுதியில் ஊருணிக்கு வரும் நீர்வரத்து பாதையை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதால் ஊருணிக்கு தண்ணீர் வரவில்லை என்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றமனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் புகார் கூறப்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வருவாய் அதிகாரி உதயகுமார் தெரிவித்தார். விருதுநகர் அருகே பாவாலியில் நீர்வரத்து பகுதிகளில் விதிமுறைகளை மீறி சவடுமண் அள்ளப்படுவதாகவும் இதனால் கண்மாய்க்கு நீர்வருவதில் பாதிப்பு ஏற்படுவதாக புகார் கூறப்பட்டது. இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.

வனத்துறை அதிகாரிகள் விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என்றும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தை முறையாக நடத்துவதில்லை என்றும் பலர் புகார் கூறினர். காட்டுபன்றிகளை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரினர். இதைதொடர்ந்து பயிர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை கேட்ட கலெக்டர் சிவஞானம், கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்