தமிழக மீனவர்களின் பிரச்சினை குறித்து அடுத்த மாதம் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை பிரதமர் ஒப்புதல் - நவாஸ்கனி எம்.பி. தகவல்

தமிழக மீனவர்களின் பிரச்சினை குறித்து அடுத்த மாதம் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார் என்று நவாஸ்கனி எம்.பி. கூறினார்.

Update: 2019-09-20 23:15 GMT
பனைக்குளம்,

தமிழகத்தில் மீனவர்கள் நிறைந்த பகுதி ராமநாதபுரம் மாவட்டம் ஆகும். இங்குள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கிருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் தாக்குவதும், சிறைபிடித்து செல்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மத்திய-மாநில அரசுகள் பேச்சுவார்த்தை மூலம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மீனவர்களின் இந்த கோரிக்கை தொடர்பாக ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனி, மத்திய மந்திரிகள் மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

இந்தநிலையில் சமீபத்தில் இலங்கை சென்ற நவாஸ்கனி எம்.பி. அங்கு அந்நாட்டு பிரதமர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்தும், அவர்கள் நடுக்கடலில் சந்தித்து வரும் பிரச்சினைகள் பற்றியும் விளக்கி கூறினார்.

இதுகுறித்து நவாஸ்கனி எம்.பி. கூறும்போது, இலங்கை பிரதமரை சந்தித்தபோது, தமிழக மீனவர்களையும், படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் பட்சத்தில் அவர்களை உடனடியாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். இந்தியா-இலங்கை அரசுகளின் சார்பில் இருநாட்டு மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். இதனை ஏற்றுக்கொண்ட இலங்கை பிரதமர் அடுத்த மாதம் அல்லது நவம்பர் மாதத்தில் இருநாட்டு மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனால் மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என நம்புகிறேன் என்றார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மீனவர் சங்க நிர்வாகிகள் என்.ஜே.போஸ், தேவதாஸ் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்