பிரதமர் மோடி- சீன அதிபர் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு

சீன அதிபர் ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் மோடி வருகையையொட்டி மாமல்லபுரத்தில் சீன பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் நேற்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

Update: 2019-09-20 23:00 GMT
மாமல்லபுரம்,

சீன அதிபர் ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் 2 நாள் அரசு முறை பயணமாக அக்டோபர் 11-ந்தேதி மாமல்லபுரம் வருகின்றனர். இங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் 2 நாட்கள் தங்கும் அவர்கள் இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுகின்றனர். இங்குள்ள புராதன சின்னங்களையும் கண்டுகளிக்கின்றனர்.

இந்தநிலையில் நேற்று சீனாவில் இருந்து வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை, சுற்றுலாத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் 50 பேர் 2 மினி பஸ்களில் மாமல்லபுரம் வந்தனர். சீன அதிபர் பார்வையிடும் முக்கிய புராதன சின்னங்கள் குறித்தும், அவரது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் தமிழக போலீசாருடன் சுற்றி பார்த்து ஆய்வு செய்தனர். அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோவில், ஐந்துரதம் போன்ற இடங்களில் சீன பாதுகாப்பு அதிகாரிகள் குழு ஆய்வு செய்து புகைப்படம் எடுத்து குறிப்பு எடுத்தனர்.

மேலும் மோடியும், ஜின்பிங்கும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுக்கும் நினைவு சின்னங்கள், பேச்சு வார்த்தை நடத்தும் இடங்களையும் இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர்.

இந்த குழுவினருடன் மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, மாமல்லபுரம் சரக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், திருக்கழுக்குன்றம் தாசில்தார் தங்கராஜ், உளவுத்துறை போலீசார் மற்றும் பலர் வந்திருந்தனர்.

மேலும் செய்திகள்