தொடர் மழையை பயன்படுத்தி வடகாடு பகுதியில் உழவு பணியை தொடங்கிய விவசாயிகள்

தொடர் மழையை பயன்படுத்தி வடகாடு பகுதியில் விவசாயிகள் உழவு பணியை தொடங்கினர்.

Update: 2019-09-20 22:00 GMT
வடகாடு, 

வடகாடு மற்றும் சுற்றுப் பகுதியை சேர்ந்த மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். ஆற்றுப்பாசனமோ, ஏரிப்பாசனமோ இல்லாத நிலையில் 600 அடி ஆழம் வரை ஆழ் குழாய் கிணறுகள் அமைத்து இங்கு நெல், கடலை, சோளம் போன்ற பயிர்கள் விவசாயம் செய்யப்படுகின்றன. மேலும் இப்பகுதியில் விளையும் மா, பலா, மற்றும் வாழை பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் மழை இல்லாமல் போனதால் நீர்மட்டம் அதாள பாதாளத்திற்கு சென்றது. இதனால் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் போனது.

இதனால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. மேலும் குடிநீர் கூட கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். மேலும் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் கடந்த ஆண்டு தாக்கிய கஜா புயலால் இப்பகுதியில் மரங்கள் மற்றும் விவசாய பயிர்கள் பெரும் சேதமடைந்தன. இதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. ஆனால் புயலுக்கு பின் போதிய மழை பெய்யாததால் உடனடியாக மீண்டும் விவசாய பணிகளை தொடங்க முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர்.

பல விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களை தரிசாக போட்டிருந்தனர். இந்தநிலையில் கடந்த சில தினங்களாக வடகாடு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டம் உயரத்தொடங்கி உள்ளது. மேலும் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் கூடுதலாக மழை பெய்யக்கூடும் என விவசாயிகள் கருதுகின்றனர். இதனால் தற்போது பெய்து வரும் மழைநீரை பயன்படுத்தி விவசாயிகள் உழவு பணியை தொடங்கி உள்ளனர்.

இது குறித்து சிக்கப்பட்டியை சேர்ந்த விவசாயி பாலசுப்பிரமணியன் கூறுகையில், மழை இல்லாமல் ஏற்பட்ட வறட்சியாலும், கஜா புயலின் தாக்கத்தாலும் இப்பகுதியில் விவசாயம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு இருந்தது. மா, பலா, வாழை, தேக்கு, பூக்கள் என அனைத்து விவசாய பயிர்களும் புயலால் அழிந்தது. இதனால் விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தியும், வரும் மாதங்களில் பருவமழை பெய்யக்கூடும் என்ற நம்பிக்கையாலும் விவசாய பணிகளை தொடங்கி உள்ளோம் என்றார்.

மேலும் செய்திகள்