கடலோர பாதுகாப்பு குழும போலீசாருடன் பணியாற்ற 70 தன்னார்வலர்கள் தேர்வு அடையாள அட்டை வழங்கப்பட்டது

கடலோர பாதுகாப்பு குழும போலீசாருடன் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட 70 தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

Update: 2019-09-21 22:45 GMT
நாகப்பட்டினம்,

தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் போலீஸ் துறை இயக்குனர் வண்ணியபெருமாள், துணை தலைவர் பவானீஸ்வரி ஆகியோரின் அறிவுறுத்தலின்படி போலீஸ் சூப்பிரண்டு சின்னசாமி மேற்பார்வையில் கடலோர பாதுகாப்பு குழுமத்தில் பணியாற்ற தமிழகம் முழுவதும் தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் ஒரு பகுதியாக நேற்று நாகையில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும அலுவலகத்தில் தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் ராஜா தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், ஜார்ஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 70 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அடையாள அட்டை

பின்னர் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன. தேர்வு செய்யப்பட்டவர்கள் ரோந்து பணி, தீவிரவாத ஊடுருவல், கடத்தல் தொடர்பான கண்காணிப்பு மற்றும் திருவிழா காலங்களில் கடற்கரை பகுதியில் பாதுகாப்பு பணி, இயற்கை பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி, கடலோர பாதுகாப்பு குழுமத்தில் உள்ள அதி நவீன படகுகள் மற்றும் ஏ.டி.வி. வாகனங்களில் ரோந்து செல்லும் பணி உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் நாகை, கீழையூர், வேளாங் கண்ணி, தரங்கம்பாடி, பூம்புகார், திருமுல்லைவாசல், புதுப்பட்டினம் உள்ளிட்ட கடலோர போலீஸ் நிலையங்களில் தலா 10 பேர் வீதம் 70 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும் செய்திகள்