வேலைக்கு செல்லும் பெண்கள் மானியத்தில் இருசக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

வேலைக்கு செல்லும் பெண்கள் மானியத்தில் இருசக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

Update: 2019-09-21 22:45 GMT
திருவண்ணாமலை,

தமிழகம் முழுவதும் கிராமப்புற மற்றும் நகர்புற பெண்கள் பணியிடங்களுக்கு எளிதில் செல்ல இரு சக்கர வாகனம் வாங்க 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.25 ஆயிரம் மானியத் தொகையும், மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு 75 சதவீதம் அல்லது ரூ.31 ஆயிரத்து 250 மானியத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரகப் பகுதியில் 2,806 பெண்களுக்கும், நகர்புறப் பகுதியில் 712 பெண்களுக்கும் என மொத்தம் 3,518 பேருக்கு 2019-20-ம் ஆண்டு பயனடைய இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயன் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2 கட்டமாக களஆய்வு சரிபார்க்கப்படும். உரிய விண்ணப்பங்கள் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.tamilnadumahalir.org என்ற இணையதள முகவரியில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஊரகப்பகுதி, நகர்புற பகுதிக்கு என தனித்தனியே உள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நேரடியாக சம்பந்தப்பட்ட தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வேலை நாட்களிலும் சமர்ப்பித்து ஒப்புகை ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைக்கு செல்லும் அனைத்து பெண்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்