சென்னையில் இருந்து தோகா சென்ற விமானத்தில் கோளாறு; அவசரமாக தரை இறங்கியதால் 128 பேர் உயிர் தப்பினர்

சென்னையில் இருந்து தோகா சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதை அறிந்த விமானி, அவசரமாக விமானத்தை மீண்டும் சென்னையில் தரை இறக்கியதால் 128 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2019-09-21 23:00 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கத்தார் தலைநகர் தோகாவுக்கு நேற்று அதிகாலையில் விமானம் செல்ல தயாராக இருந்தது. அதில் 121 பயணிகள், 7 விமான ஊழியர்கள் என 128 பேர் இருந்தனர்.

விமானம் ஓடுபாதையில் இருந்து புறப்பட்டு நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் வால் பகுதியில் புகை வருவதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது. விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதை அறிந்த விமானி, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து விமானத்தை சென்னையில் அவசரமாக தரை இறக்க அனுமதிக்கப்பட்டது. அதைதொடர்ந்து விமானம் மீண்டும் சென்னையில் தரை இறக்கப்பட்டது. அதில் இருந்த 128 பேரும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டு ஓய்வு கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டனர். ஆனால் உடனடியாக பழுதை சரி செய்ய முடியாததால், 121 பயணிகளும் வேறு விமானம் மூலம் தோகாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

உரிய நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறை விமானி கண்டுபிடித்துவிட்டதால் அதில் இருந்த 128 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மேலும் செய்திகள்