நூறு சதவீத மானியத்துடன் 20 பண்ணைக்குட்டைகள் கலெக்டர் சாந்தா தகவல்

பெரம்பலூர் மாவட்டத்தில் நூறு சதவீத மானியத்துடன் 20 பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட உள்ளது என்று மாவட்ட கலெக்டர் சாந்தா கூறினார்.

Update: 2019-09-22 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் அடிக்கடி வறட்சி ஏற்பட்டு, விளைச்சல் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் பெரும் ந‌‌ஷ்டத்தை எதிர்கொள்கின்றனர். இதற்கு முதன்மையான காரணம் பயிர்களுக்கு தேவையான நேரத்தில், தேவையான அளவு பாசனநீர் கிடைக்காததே ஆகும். இதற்கு தீர்வாக வயல்வெளிகளில் பண்ணைக்குட்டைகள் அமைத்து, பெய்யும் மழைநீரை முறையாக சேமித்தால், இந்த நீரைக்கொண்டு தேவையான நேரத்தில் பயிர்களுக்கு உயிர்நீர் அளித்து, நல்ல மகசூலை விவசாயிகள் அடையலாம். இதனால் நல்ல வருவாயும் உறுதி செய்யப்படுகிறது. மேலும் பண்ணைக்குட்டையினை நீர் ஆதாரமாக கொண்டு தெளிப்புநீர் பாசன அமைப்பை நிறுவி, பயிர்களுக்கு சிக்கனமான முறையில் நீர் பாய்ச்சுவதன் மூலம் கூடுதலான பரப்பில் பாசனவசதியை ஏற்படுத்திக் கொள்ளலாம். பண்ணைக்குட்டைகளில் மீன்களை வளர்த்து அதன்மூலம் கூடுதல் வருமானத்தையும் விவசாயிகள் பெறலாம். பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 2019-20-ம் நிதியாண்டில் 20 பண்ணைக்குட்டைகள் அமைக்கப்படவுள்ளது.

நூறு சதவீத...

இதற்காக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள் ளது. இந்த பண்ணைக்குட்டைகள் நூறு சதவீத மானியத்துடன் அரசு செலவில் விவசாயிகளுக்கு அமைத்துக் கொடுக்கப்படுகிறது. பண்ணைக்குட்டையின் நீளம், அகலம் மற்றும் ஆழத்தினை நிலத்தின் அமைப்பிற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளலாம்.

அரசின் முழு நிதிஉதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின்கீழ், பண்ணைக்குட்டை அமைக்க விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்கள் அல்லது கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் அலுவலகம் அல்லது எளம்பலூர் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் ஆகியவற்றில் விவசாயிகள் தங்களது பட்டாநகல், அடங்கல் மற்றும் புலவரைபட நகல் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்