வாகன சோதனையில் தகராறு: போலீஸ்காரர் மீது மோட்டார் சைக்கிளை ஏற்ற முயன்ற வாலிபர் நாகர்கோவிலில் பரபரப்பு

நாகர்கோவிலில் நடந்த வாகன சோதனையின் போது ஏற்பட்ட தகராறில், போலீஸ்காரர் மீது மோட்டார் சைக்கிளை ஏற்ற முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-22 23:00 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் ஆயுதப்படை போலீஸ்காரர் லிபின் டி வில்லியம் மற்றும் சிலர் செட்டிகுளம் சந்திப்பில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தார். இதனை கண்ட லிபின் அந்த வாலிபரை தடுத்து நிறுத்தி, எச்சரித்தார். இதனால் அவர்கள் இடையே தகராறு நடந்தது.

போலீஸ்காரர் காயம்

இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர், லிபினை தகாத வார்த்தை பேசி, மோட்டார் சைக்கிளை அவர் மீது ஏற்ற முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் லிபின் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது.

உடனே போலீசார் அந்த வாலிபரை பிடிக்க ஓடி வந்தனர். அதற்குள் அவர் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் சென்று விட்டார். காயம் அடைந்த லிபினுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுபற்றி கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்