குமரி மாவட்டத்தில் மழை: பெருஞ்சாணி அணை பகுதியில் 76 மி.மீ. பதிவு

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. பெருஞ்சாணி அணை பகுதியில் 76 மி.மீ. மழை பதிவானது.

Update: 2019-09-23 23:00 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இடி–மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. அணை நீர்பிடிப்பு மற்றும் மலை பகுதிகளிலும் மழை கொட்டியது. மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

 மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெருஞ்சாணி அணை பகுதியில் 76.4 மி.மீ. மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:–

பேச்சிப்பாறை–6, சிற்றார் 1–4, களியல்–2.4, பூதப்பாண்டி–31.6, சுருளோடு–48.4, கன்னிமார்–37.2, ஆரல்வாய்மொழி–2, பாலமோர்–29.6, அடையாமடை–13 என்ற அளவில் மழை பதிவாகியிருந்தது.

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. குறிப்பாக பெருஞ்சாணி அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 517 கனஅடி தண்ணீர் வந்தது. அது நேற்று அதிகரித்து 980 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் பாசனத்துக்காக திறந்து விடப்படுகிறது.

இதே போல 251 கன அடி தண்ணீர் வந்த பேச்சிப்பாறை அணைக்கு நேற்று 310 கனஅடி தண்ணீர் வந்தது. சிற்றார் 1 அணைக்கு 172 கனஅடி தண்ணீர் வருகிறது. அதோடு பேச்சிப்பாறை அணையில் இருந்து 122 கனஅடியும், சிற்றார் 1 அணையில் இருந்து 200 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணை பகுதிகளில் மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குமரி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையின் காரணமாக குழித்துறை தாமிரபரணி ஆற்றில் உள்ள தடுப்பணை மீது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தடுப்பணை மீது இரு சக்கர வாகனத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்