கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம்: குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் வந்த கிராம மக்கள்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், குடிநீர் கேட்டு கிராம மக்கள் காலிக்குடங்களுடன் வந்து மனு கொடுத்தனர்.

Update: 2019-09-23 22:00 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள், கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனர்.

இதில் வேடசந்தூர் தாலுகா மோர்பட்டி நடுத்தெருவை சேர்ந்த மக்கள், காலிக்குடங்களுடன் வந்து குடிநீர் கேட்டு மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் பகுதியில் கடந்த ஓராண்டாக முறையான குடிநீர் வினியோகம் இல்லை. இதனால் அருகில் இருக்கும் பகுதிகளுக்கு சென்றாலும் 2 குடங்களுக்கு மேல் குடிநீர் கிடைப்பதில்லை. தேவையான அளவு குடிநீர் கிடைக்காமல், பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறோம். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, குடிநீர் வசதி செய்து தரவேண்டும், என்று கூறப்பட்டுள்ளது. மேலும் விருப்பாட்சி அருகேயுள்ள தாசரிபட்டி கிராம மக்களும், காலிக்குடங்களுடன் வந்து குடிநீர் கேட்டு மனு கொடுத்தனர். கிராம மக்கள் கூறுகையில், தாசரிபட்டியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்வதில்லை. இதனால் தேவையான அளவு குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறோம். எங்கள் கிராமத்துக்கு குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

அதேபோல் அகரம் பேரூராட்சி உலகம்பட்டி கிராம மக்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருடன் வந்து கோஷமிட்டபடி வந்தனர். அப்போது கம்பின் இருமுனைகளிலும் காலிக்குடங்களை கட்டி தோளில் சுமந்து வந்தனர். மேலும் குடங்களில் ரூபாய் நோட்டுகள் போன்ற காகிதத்தை ஒட்டி இருந்தனர். பின்னர் அவர்கள் குடிநீர் மற்றும் தெருவிளக்கு கேட்டு மனு கொடுத்தனர்.

இதுபற்றி கிராம மக்கள் கூறுகையில், உலகம்பட்டி பிரிவு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் மற்றும் தெருவிளக்கு வசதி முறையாக செய்து தரவில்லை. இதனால் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். எனவே, போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தோம். இதையடுத்து 3 தெருவிளக்குகள் மட்டும் பொருத்தினர். ஆனால், குடிநீர் வசதி செய்து தரவில்லை. எங்கள் பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்க வேண்டும். மீதமுள்ள பகுதிகளுக்கு தெருவிளக்கு பொருத்த வேண்டும், என்றனர்.

மேலும் திண்டுக்கல் மாநகராட்சி முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் விஜயகுமார், பொதுமக்களுடன் வந்து கொடுத்த மனுவில், 30-வது வார்டில் உள்ள திருமலைசாமிபுரம், இந்திராநகர் பகுதியில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் முறையாக வரவில்லை. இதனால் மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். அந்த பகுதிகளுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

திண்டுக்கல் கிழக்கு சவேரியார்பாளையம் மக்கள் கொடுத்த மனுவில், கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு சவேரியார்பாளையம் 1,2 மற்றும் 4-வது தெருவில் புதிதாக சாலை அமைப்பதற்காக பழைய சாலையை சமப்படுத்தினர். ஆனால், புதிய சாலை அமைக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் தெருக்கள் குண்டும், குழியுமாக மாறி விட்டது. அனைவரும் பெரும் சிரமம் அடைந்து வருகிறோம். உரிய நடவடிக்கை எடுத்து சாலை அமைக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்