பழனி பஸ் நிலையத்தில், மேற்கூரை இடிந்து விழுந்து டீக்கடை தொழிலாளி படுகாயம்

பழனி பஸ் நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் டீக்கடை தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

Update: 2019-09-23 22:15 GMT
பழனி, 

பழனி நகரின் மைய பகுதியில் வ.உ.சி. மத்திய பஸ்நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து திண்டுக்கல், மதுரை, கோவை, ஈரோடு, திருப்பூர் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஒட்டன்சத்திரம், நெய்க்காரப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த பஸ்நிலையத்தில் டீக்கடைகள், ஓட்டல், பழக்கடைகள் அதிகம் உள்ளன. நேற்று முன்தினம் இரவு பழனியில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் பஸ்நிலையத்தில் போலீஸ் உதவி மையம் அருகேயுள்ள டீக்கடையின் முன்பகுதி மேற்கூரை இடிந்து விழுந்தது. அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த டீக்கடை தொழிலாளி பழனி பாளையத்தை சேர்ந்த குணசேகரன் (வயது 69) என்பவர் தலையில் கான்கிரீட் சுவர் விழுந்து படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நல்ல வேளையாக அதிகாலை நேரம் என்பதால் பஸ் நிலையத்தில் பயணிகள் யாரும் இல்லை. இல்லையெனில் பெரும் ஆபத்து ஏற்பட்டு இருக்கும்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் பழனி டவுன் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில், ஏற்கனவே பழனி பஸ்நிலையத்தின் மேற்கூரை சேதமாகி இருந்ததாக தெரிகிறது. எனவே நேற்று முன்தினம் மழை பெய்ததால் மேற்கூரை சுவர் பலமிழந்து இடிந்து விழுந்தது தெரியவந்தது.

மேலும் பழனி நகராட்சி ஆணையர் நாராயணன் தலைமையிலான அதிகாரிகள் அங்கு வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து அங்கு இடிந்து விழுந்த கான்கிரீட் கழிவுகளை அப்புறப்படுத்த நகராட்சி ஆணையர் உத்தரவிட்டார். அதையடுத்து கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டன. 

மேலும் செய்திகள்