ஆவூர் அருகே கார் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வெல்டர் பலி 2 வாலிபர்கள் படுகாயம்

ஆவூர் அருகே கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி வெல்டர் பரிதாபமாக இறந்தார். 2 வாலிபர்கள் படுகாயமடைந்தனர்.

Update: 2019-09-23 23:00 GMT
விராலிமலை,

புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூர் செப்பிளாந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 29). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வெல்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பாண்டியன், அவரது தம்பி சிவானந்தம் (21) மற்றும் அதே ஊரை சேர்ந்த சப்பானி மகன் வீரமணி (19) ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளில் விராலிமலைக்கு சென்றனர். மோட்டார் சைக்கிளை பாண்டியன் ஓட்டினார். பின்னர் மாலை அங்கிருந்து 3 பேரும் அதே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

விராலிமலை-கீரனூர் சாலையில், அவ்வையார்பட்டிக்கும்-நீர்பழனிக்கும் இடையே ஒரு வளையில் சென்ற போது, அந்த வழியாக மதுரையை சேர்ந்த முருகன் (54) என்பவர் ஓட்டிச்சென்ற கார் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டியன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மண்டையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோரிக்கை

இந்த விபத்திற்கு நெடுஞ்சாலை துறையினரும் முக்கிய காரணம் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அவ்வையார்பட்டிக்கும்-நீர்பழனிக்கும் இடையே சாலையின் இரண்டு பக்கமும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் அங்குள்ள வளைவுகளில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு, எதிரே வரும் வாகனங்கள் சரியாக தெரிவதில்லை. இதன் காரணமாக அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே விராலிமலை-கீரனூர் சாலையில் இருபுறமும் அடர்ந்து வளர்ந்துள்ள சீமைகருவேல மரங்களை வெட்டி அப்புறப்படுத்த நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்