வேலைவாய்ப்பு கேட்டு பார்வையற்றோர் உண்ணாவிரத போராட்டம்

வேலை வாய்ப்பு கேட்டு திருச்சியில் பார்வையற்றோர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அப்போது, லாட்டரி சீட்டு விற்பனையை அரசு மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

Update: 2019-09-23 23:00 GMT
திருச்சி,

திருச்சியில் பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்தை லூப்ரா சேவை மைய இயக்குனர் தாமஸ் தொடங்கி வைத்தார். பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் துணைத்தலைவர் வரதராஜன், பொதுச்செயலாளர் வீரப்பன், மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க செயலாளர் மாரிக்கண்ணு உள்ளிட்ட ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். பார்வையற்றவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காகவும், உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவும், அரசின் கவனத்தை ஈர்க்கவும் இந்த உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் லாட்டரி சீட்டு

மேலும் போராட்டத்தில், தமிழக அரசால் வழங்கப்படும் பார்வையற்றவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.1000-ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி பகுதிகளுக்கு உள்ளிட்ட இடங்களில் வேலைவாய்ப்பற்ற பார்வையற்றவர்கள் பெட்டிக்கடை உள்ளிட்ட சிறு தொழில் நடத்திட அரசு சிறப்பு ஆணை பிறப்பிக்க வேண்டும். கேரள மாநிலத்தைபோல தமிழக அரசும் மீண்டும் லாட்டரி சீட்டு விற்பனை பரிசுத்திட்டத்தை கொண்டு வந்து பார்வையற்றவர்களுக்கு சுய தொழில் வேலைவாய்ப்பு கிடைத்திட வழிவகுக்க வேண்டும். படித்த பார்வையற்ற பட்டதாரிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் விதிமுறைகளை தளர்த்தி வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். அரசால் வழங்கப்படும் இலவச பஸ் பயண அட்டை மற்றும் 75 சதவீத கட்டண சலுகை திட்டத்தை வழங்கிட நடத்துனர்கள் மறுப்பது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. எனவே, இத்திட்டத்தை தடையின்றி நடத்திட அரசை கேட்டுக்கொள்வது என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும் செய்திகள்