புதுவை அருகே பட்டப்பகலில் பயங்கரம்: காங்கிரஸ் பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை பழிக்குப்பழியாக நடந்த சம்பவத்தால் பரபரப்பு

புதுவை அருகே வெடிகுண்டு வீசியும் கத்தியால் வெட்டியும் காங்கிரஸ் பிரமுகர் கொலை செய்யப்பட்டார். பழிக்குப்பழியாக நடந்த இந்த கொலை சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2019-09-23 23:45 GMT
காலாப்பட்டு,

புதுச்சேரி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் காலாப்பட்டு ஜோசப். இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ந் தேதி வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் வந்தபோது அவரது பின்னால் மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது.

புதுச்சேரியையொட்டியுள்ள தமிழக பகுதியில் நடந்த இந்த கொலை தொடர்பாக ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரித்ததில் தொழில் போட்டி காரணமாக ஜோசப் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

ஜோசப் கொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி காலாப்பட்டு பங்களா தெருவைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் சந்திரசேகர் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் செல்வக்குமார், பார்த்திபன், ஏழுமலை, சாண்டில்யன் உள்பட 15 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

ஆனால் ஜோசப் கொலை வழக்கில் கைதான சந்திரசேகர் உள்பட குற்றம்சாட்டப்பட்டவர்கள் காலாப்பட்டு ஊருக்குள் தங்கி இருந்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று போலீசார் கருதினர். இதனால் அவர்கள் ஊருக்குள் நுழைய தடை உத்தரவு பெற்றிருந்தனர்.

அதன் காரணமாக காங்கிரஸ் பிரமுகர் சந்திரசேகர் கீழ்புத்துப்பட்டு அருகே உள்ள மஞ்சக்குப்பத்தில் மாமனார் வீட்டில் மனைவியுடன் வசித்து வந்தார். மேலும் காலாப்பட்டு பகுதிக்கு வருவதையும் அவர் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஜோசப் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு நபரான பார்த்திபன் என்பவரின் மனைவி சித்ரா உடல் நலம் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் இறந்துவிட்டார். அவருடைய வீடு புதுச்சேரி கனகசெட்டிகுளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு எதிரே உள்ளது.

இதுபற்றி தெரியவந்ததும் சித்ராவின் சாவில் கலந்து கொள்ள காங்கிரஸ் பிரமுகர் சந்திரசேகர், தனது மனைவி சுமலதாவுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் நேற்று காலை கனகசெட்டிக்குளத்துக்கு வந்தார். கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து பிம்ஸ் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வந்தனர். சந்திரசேகருக்கு அருகே வந்து அவரை மறித்து பேச்சுக்கொடுத்தனர். அப்போது அவர்களில் ஒருவன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து சந்திரசேகர் மீது வீசினான். இதில் சந்திரசேகரும், அவருடைய மனைவியும் நிலைகுலைந்து மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர்.

உடனே அந்த கும்பல் சந்திர சேகரை மட்டும் சுற்றி வளைத்து பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டியது. இதில் அவருடைய தலை மற்றும் கழுத்தில் வெட்டு விழுந்தது. இதில் பலத்த காயமடைந்து அந்த இடத்திலேயே சந்திரசேகர் பரிதாபமாகச் செத்தார். இதன்பிறகு அவர் இறந்து போனதை உறுதி செய்த பிறகே சர்வ சாதாரணமாக அந்த கும்பல் மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றது.

கொலை நடந்த இடம் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இந்த படுகொலையை பார்த்ததும் அந்த பகுதியில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி தகவல் அறிந்து காலாப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

மேலும் புதுச்சேரியில் இருந்து போலீஸ் துப்பறியும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் சந்திரசேகரின் உடல் கிடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.

கொலை செய்யப்பட்ட சந்திரசேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

புதுச்சேரி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜோசப் படுகொலைக்கு பழிக்குப் பழியாக சந்திரசேகர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. ஜோசப் கொலை செய்யப்பட்டது போலவே மோட்டார் சைக்கிள்களில் வந்து சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். எனவே இதில் தொடர்புடைய கும்பலை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சந்திரசேகர் கொலை சம்பவத்தால் காலாப்பட்டு பகுதியில் திடீர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் ஏற்கனவே கொலையுண்ட வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜோசப் வீட்டிலும் பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

கொலையுண்ட சந்திரசேகருக்கு யோகலட்சுமி என்ற மகளும், சுப்பிரமணி என்ற மகனும் உள்ளனர். இவர்களில் யோகலட்சுமி பாக்கமுடையான்பட்டில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். சுப்பிரமணி புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

காங்கிரஸ் பிரமுகர் சந்திரசேகர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ள சந்திரசேகரின் மனைவி சுமலதா காலாப்பட்டு போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில் தனது கணவர் கொலை செய்யப்பட்டதில் காலாப்பட்டை சேர்ந்த டேனியல், சரவணன், சம்பந்தம், கோதண்டம், உத்திராடன், சுகன் ஆகியோர் உள்பட 10 பேருக்கு தொடர்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தி, கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்