திருச்சியில் பரபரப்பு கஞ்சா வியாபாரி கைது போலீசாரை கண்டித்து தாய் தீக்குளிப்பு

திருச்சியில் கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்ததை கண்டித்து, தாய் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-24 23:00 GMT
திருச்சி,

திருச்சி தாராநல்லூர் பகுதியை சேர்ந்தவர் படையப்பா (வயது 22). கஞ்சா வியாபாரியான இவர் மீது காந்திமார்க்கெட் போலீஸ் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் படையப்பா வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாக காந்திமார்க்கெட் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் நேற்று மதியம் விரைந்து சென்று அவரை கைது செய்தனர். மேலும் வீட்டில் இருந்து கஞ்சாவை கைப்பற்றினர்.

தாய் தீக்குளிப்பு

அப்போது வீட்டில் இருந்த அவரது தாய் தமிழ்செல்வி(50), தனது மகன் மீது போலீசார் பொய் வழக்கு போடுவதாக கூறி, திடீரென போலீசாரை கண்டித்து உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். அவரை அக்கம், பக்கத்தினர் உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பரபரப்பு

இதற்கிடையே கைதான படையப்பாவை காந்திமார்க்கெட் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர். அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் தீக்குளித்த தமிழ்செல்வியும் கஞ்சா வியாபாரி என போலீசார் கூறினர். மகன் கைது செய்யப்பட்டதை கண்டித்து தாய் தீக்குளித்த சம்பவம் அந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்