ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் அரசு பஸ்- வேன் மோதல்; 3 ஆசிரியைகள் படுகாயம்

ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் அரசு பஸ்சும், சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில், தூத்துக்குடியில் இருந்து திற்பரப்புக்கு சுற்றுலா வந்த 3 ஆசிரியைகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-09-24 22:45 GMT
ஆரல்வாய்மொழி,

தூத்துக்குடி இந்திராநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஆசிரியைகள் 10 பேர் நேற்று வேனில் குமரி மாவட்டம் திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா வந்த னர். வேனை தூவல்ராஜபுரத்தை சேர்ந்த கண்ணன் (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். அந்த வேன் நேற்று காலை 7 மணியளவில் ஆரல்வாய்மொழி சோதனை சாவடிக்கு வந்தது.

அங்கு சாலையில் வாகனங்களை சோதனை செய்வதற்காக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றை வேன் கடந்து செல்ல முயன்ற போது, எதிரே நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி நோக்கி ஒரு அரசு பஸ் வந்தது.

நேருக்கு நேர் மோதல்

கண்ணிமைக்கும் நேரத்தில் அரசு பஸ்சும், வேனும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதனால், வேனில் இருந்தவர்கள் அலறினர். இந்த விபத்தில் ஆசிரியைகள் இவாஞ்சலின் (32), மாரி செல்வம் (37), சுவாதிகா (31) மற்றும் வேன் டிரைவர் கண்ணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். சோதனை சாவடியில் இருந்த போலீசார் அவர்களை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் வேனின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதுபோல், அரசு பஸ்சின் முன்பக்கமும் சேதமடைந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்