மதிப்பெண் பட்டியல் முறைகேடு: கூடுதல் தேர்வாணையர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்; காமராஜர் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் பட்டியல் முறைகேடு தொடர்பாக கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2019-09-24 22:15 GMT
மதுரை,

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்கல்வி இயக்ககத்தில் மதிப்பெண் சான்றிதழ் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக தேர்வு எழுதாத மாணவர்களுக்கும் மதிப்பெண் பட்டியல் வினியோகம் செய்யப்பட்டிருந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்களது முதல்கட்ட விசாரணையில், முறைகேட்டுக்கான ஆதாரங்கள் இருப்பது தெரியவந்தது. இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த பல்கலைக்கழகம் தரப்பில் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அக்பர்அலி தலைமையில் ஒரு உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது.

ஏற்கனவே, லஞ்ச ஒழிப்புப்போலீசாரின் விசாரணையில் தொலைநிலைக்கல்வி கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன், மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் கம்ப்யூட்டர் பிரிவின் சூப்பிரண்டு சத்தியமூர்த்தி, ஊழியர் கார்த்திகை செல்வன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இந்தநிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையிலான உயர்மட்டக்குழுவினர் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் நேற்று முன்தினம் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில், முறைகேடு குற்றச்சாட்டு புகாரில் குறிப்பிட்டுள்ள மேற்கண்ட 3 நபர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே, அவர்கள் தொடர்ந்து பணியில் நீடித்தால் ஆதாரங்களை அழித்துவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால், விசாரணை பாதிக்கப்படும்.

எனவே, சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. அதையடுத்து, நேற்று முன்தினம் துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமையில் நடந்த ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் சம்பந்தப்பட்ட நபர்களை பணியிடை நீக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன், கம்ப்யூட்டர் பிரிவு சூப்பிரண்டு சத்தியமூர்த்தி, ஊழியர் கார்த்திகை செல்வன் ஆகியோர் நேற்று வழக்கம்போல பணிக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு பதிவாளர் அலுவலகம் மூலம் பணியிடை நீக்க உத்தரவு நகல் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் தங்களது பணியிடங்களில் இருந்து வெளியேறி சென்றனர். இந்த சம்பவம் பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்