குறைதீர்க்கும் நாள் கூட்டம்: பொதுமக்களிடம் இருந்து 215 மனுக்கள் பெறப்பட்டன

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 215 மனுக்கள் பெறப்பட்டன.

Update: 2019-09-24 23:30 GMT
சேலம்,

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளை கலெக்டரிடம் மனுவாக எழுதி கொடுத்தனர்.

கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 215 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்த சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதில், சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் சி.எஸ்.ஐ. தேவாலயத்தை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள ரூ.75 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாற்றுத்திறனாளி விடுதலை முன்னணி அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் மோகன்ஜி தலைமையில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் ராமனை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘ரெட்டியூர் கிராமம் கோமாளிக்காடு என்ற பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்துள்ளோம்.

ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் வீட்டுமனை பெறுவதற்காக வீடு இல்லை என்பதற்கான சான்றிதழை கொடுக்க அதிகாரிகள் இழுத்தடித்து வருகின்றனர். எனவே வீட்டுமனை பட்டா கிடைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 18-வது வார்டில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காலி இடத்தில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பயங்கர துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே காலி இடத்தில் கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்