சிதம்பரத்தில் மாற்று இடம் கேட்டு சப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

சிதம்பரத்தில் மாற்று இடம் கேட்டு சப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Update: 2019-09-24 22:15 GMT
சிதம்பரம், 

சிதம்பரத்தில் உள்ள தில்லைகாளியம்மன் கோவில் அருகே உள்ள ஓடை பகுதியில் கடந்த ஆண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் ஓடை கரை பகுதியில் கட்டப்பட்டு இருந்த 369 வீடுகள் அதிரடியாக இடிக்கப்பட்டது. இந்த பணியின் போது, மாற்று இடம் வழங்குவதாக அதிகாரிகள் தரப்பில் தெரித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுநாள் வரைக்கும் இவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படவில்லை.

இதையடுத்து அவர்கள் தில்லை காளியம்மன் கோவில் தெரு, பூதகேணி, வாகீச நகர், கோவிந்தசாமி நகர், குமரன் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். மேலும் மாற்று இடம் வழங்க கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்களையும் அளித்து வந்தனர். ஆனால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால், பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் முடிவண்ணன் தலைமையில் திரண்டு வந்து முற்றுகையில் ஈடுபட்டனர்.

பின்னர் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமதாசை சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

தில்லைகாளியம்மன் கோவில் அருகே உள்ள ஓடை பகுதியில் நாங்கள் 60 ஆண்டுகளாக வசித்து வந்தோம். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியின் போது அங்கிருந்த 369 வீடுகளை இடித்து, எங்களை அங்கிருந்து வெளியேற்றினர்.

ஆனால் எங்களுக்கான மாற்று இடம் இதுவரைக்கும் வழங்கவில்லை. இதனால் நாங்கள் சொந்தமாக வீடு இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளோம். இது தொடர்பாக 3 முறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து விரைந்து செயல்பட்டு எங்களுக்கு மனைப்பட்டாவுடன் புதிய வீடுகளை கட்டி தர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

மனுவை பெற்றுக்கொண்ட சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமதாஸ் இது குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்