நாட்டு நலப்பணித்திட்டத்தின் சிறந்த சேவைக்காக பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு தேசிய விருது ஜனாதிபதி வழங்கினார்

நாட்டு நலப்பணித்திட்டத்தின் சிறந்த சேவைக்காக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

Update: 2019-09-25 23:00 GMT
திருச்சி,

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆளுகைக்குட்பட்ட 8 மாவட்டங்களில் மொத்தம் 154 கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 122 கல்லூரிகளில் 313 நாட்டு நலப்பணித்திட்ட(என்.எஸ்.எஸ்.) அலகுகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு அலகும் 100 தன்னார்வ தொண்டர்களை கொண்டது. ஒவ்வொரு அலகும் ஒரு கிராமத்தை தத்தெடுத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்கள் வாயிலாக 1 லட்சத்து 79 ஆயிரத்து 220 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்தநிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு நாட்டு நலப்பணி திட்டத்தின் 2017-18-ம் ஆண்டிற்கான சிறந்த பல்கலைக்கழகத்திற்கான தேசிய விருதினை மத்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அளித்துள்ளது. புதுடெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று முன்தினம் நடந்த விழாவில், பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் ப.மணிசங்கர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் இருந்து தேசிய விருதுக்கான கோப்பையை பெற்றுக்கொண்டார்.

மேலும் சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற விருதிற்கான சான்றிதழ், பதக்கம் மற்றும் ரொக்கப்பரிசு ரூ.3 லட்சம் ஆகியவற்றை பேராசிரியர் லட்சுமிபிரபா பெற்றுக்கொண்டார். இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மொத்தம் 2 பல்கலைக்கழகங்கள் மட்டுமே 2017-18-ம் ஆண்டிற்கான தேசிய விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் கோபிநாத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்