வெள்ளகோவில் அருகே கோர விபத்து: அரசு பஸ்-வேன் மோதல்; தாய், மகன் பலி

வெள்ளகோவில் அருகே அரசு பஸ்-வேன் மோதிக்கொண்ட கோர விபத்தில் தாய்-மகன் பலியானார்கள். துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்து விட்டது. இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-09-25 22:45 GMT
வெள்ளகோவில், 

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் பாபு (வயது 42). இவர் சுல்தான்பேட்டையில் பர்னிச்சர் கடை வைத்திருந்தார். இந்த நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பாபு முடிவு செய்தார். அதன்படி பாபு தனது தாயார் வடிவாம்பாளை (60) ஒரு வேனில் அழைத்துக்கொண்டு நேற்று காலை அரவக்குறிச்சி சென்றார். வேனை பாபு ஓட்டினார். முன் இருக்கையில் வடிவாம்பாள் அமர்ந்து இருந்தார்.

இந்த நிலையில் இவர்களுடைய வேன், கோவை-திருச்சி சாலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த ஓலப்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சையில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.

கண் இமைக்கும் நேரத்தில் அரசு பஸ்சும், வேனும் நேருக்குநேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் வேன் அப்பளம் போல் நொறுங்கி உருக்குலைந்தது. இந்த விபத்தில் உடல் நசுங்கிய நிலையில் வேனுக்குள்ளேயே பாபு பலியானார். பலத்த காயம் அடைந்த அவருடைய தாயார் வடிவாம்பாள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அருகில் உள்ளவர்கள் வடிவாம்பாளை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வடிவாம்பாளும் இறந்தார்.

இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் வெள்ளகோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம்அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். துக்க நிகழ்ச்சிக்காக சென்றபோது விபத்தில் தாய்-மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கோர விபத்தால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்