லாரி-கார் மோதல்: பனியன் நிறுவன அதிபர் பலி

பல்லடம் அருகே காரும்-கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரியும்-காரும் மோதிக்கொண்டதில் பனியன் நிறுவன அதிபர் பலியானார். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-09-25 22:30 GMT
காமநாயக்கன்பாளையம்,

திருப்பூர் ஏ.வி.சி.லே-அவுட் காந்திநகரை சேர்ந்தவர் முத்துசாமி (வயது45). இவர் வசிக்கும் பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு கவிதா (35) என்ற மனைவியும், சதீஷ் என்ற மகனும் உள்ளனர். முத்துசாமி தனது தம்பி லோகநாதனுடன் (44) கேரளாவில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு திருப்பூருக்கு திரும்பிகொண்டிருந்தார். காரை முத்துசாமி ஓட்டிச்செல்ல அவரது தம்பி லோகநாதன் உடன் அமர்ந்து சென்றார். கார் பொள்ளாச்சி-பல்லடம் அருகே உள்ள வெங்கிட்டபுரம் என்ற இடத்தில் வரும்போது எதிரே கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்துள்ளது.

அப்போது எதிர்பாராத விதமாக முத்துசாமி ஓட்டிச்சென்ற காரும், கியாஸ் சிலிண்டர் ஏற்றிச்சென்ற லாரியும் நேருக்கு மோதிக்கொண்டது. இதில் முத்துசாமியும்,லோகநாதனும் பலத்த காயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கம் இருந்தவர்கள் 2 பேரையும் பல்லடம் அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முத்துசாமி பரிதாபமாக இறந்தார். பலத்த காயம் அடைந்த லோகநாதன் பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல்சிகிச்சைக்காக பல்லடத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து நடந்தவுடன் கியாஸ் சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரி டிரைவர் பொள்ளாச்சியை சேர்ந்த சதீஷ்குமார் (42) தப்பி ஓடிவிட்டார். விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்