தேன்கனிக்கோட்டை அருகே, பிளஸ்-1 மாணவர் டெங்கு காய்ச்சலுக்கு பலி

தேன்கனிக்கோட்டை அருகே பிளஸ்-1 மாணவர் டெங்கு காய்ச்சலுக்கு பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2019-09-25 22:45 GMT
தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது ஆலஹள்ளி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் லகுமப்பா. இவரது மகன் தினேஷ் (வயது16). இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வந்தார். தினேஷ் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அவரை பெற்றோர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் காய்ச்சல் குணமாகவில்லை.

இந்தநிலையில் கடந்த 23-ந் தேதி தினேஷ் பள்ளியில் தேர்வு எழுதுவதற்காக சென்றார். அங்கு தேர்வு எழுதிக் கொண்டிருந்த நேரத்தில் மாணவர் தினேஷ் திடீரென மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் இது தொடர்பாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் பள்ளிக்கு சென்று தினேசை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது தினேசுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் தினேசுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி தினேஷ் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்