எலச்சிபாளையத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி தர்ணா போராட்டம்

எலச்சிபாளையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

Update: 2019-09-25 22:30 GMT
எலச்சிபாளையம்,

எலச்சிபாளையம் ஒன்றியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் எலச்சிபாளையம் பஸ் நிறுத்தத்தில் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.

எலச்சிபாளையத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மையம் கடந்த 13 ஆண்டுகளாக இயங்கி வந்தது. தற்போது குமாரமங்கலத்திற்கு மையம் மாற்றப்பட்டதால் இப்பகுதியில் நடைபெறும் விபத்துக்களுக்கு உரிய நேரத்தில் 108 ஆம்புலன்சை பயன்படுத்த முடியாமல் அந்த பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே தொடர்ந்து இப்பகுதியில் 108 ஆம்புலன்ஸ் சேவையை இயக்கவேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை புதிதாக தொடங்கவேண்டும். எலச்சிபாளையம் பஸ் நிறுத்தத்தில் பொதுமக்களுக்கு கழிப்பிடம், நிழற்கூட வசதி அமைத்து தரவேண்டும். கொத்தமபாளையம் தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்றவேண்டும். அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தவேண்டும். சமத்துவபுரம் செக்கான்காட்டில் சாக்கடை கால்வாய்கள் அமைக்கவேண்டும்.

சூரப்புலி அம்மன் கோவில்தெரு, ராஜகணபதிதெரு, தொரட்டிக்காடு, அகரம், பெருமாள் கோவில்தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடை, சாலை வசதி அமைத்து தரவேண்டும். காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு தினசரி காவிரி குடிநீர் வழங்கவில்லை. தொடர்ந்து காவிரிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். கடந்த 2 ஆண்டாக முதியோர் ஓய்வூதியத்துக்கு மனு அளித்த அனைவருக்கும் உடனடியாக ஓய்வூதியம் வழங்கவேண்டும். போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள நூலக கட்டிடத்தை புதிதாக கட்டி தரவேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவது தடுக்கவேண்டும். மெயின் ரோட்டில் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்க வேகத்தடைகள் அமைக்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் பி.சுரேஷ் தலைமை தாங்கினார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குனர் மாரிமுத்து வரவேற்றார். கட்சியின் ஒன்றிய செயலாளர் சு.சுரேஷ். ஒன்றியக்குழு உறுப்பினர் வெங்கடாசலம், ரமேஷ், கிளை செயலாளர்கள் சந்திரன், ஜெயந்தி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் கட்சியினர், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் எலச்சிபாளையம் முன்னாள் கிளை செயலாளர் பி.கிட்டுசாமி நன்றி கூறினார். முன்னதாக போராட்டத்தின்போது மழை பெய்தது. அதையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்