கன்னியாகுமரியில் கடல் சீற்றம்; மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

கன்னியாகுமரியில் கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது.

Update: 2019-09-26 23:00 GMT
கன்னியாகுமரி,

குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே போல் கன்னியாகுமரியில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. நேற்று காலையிலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் சுற்றுலா பயணிகளால் சூரிய உதயத்தை பார்க்க முடியவில்லை.

அத்துடன், நேற்று காலையில் கன்னியாகுமரியில் கடல் சீற்றம் ஏற்பட்டது. கடலில் 10 அடி உயரம் வரை ராட்சத அலைகள் எழுந்து கரையை நோக்கி சீறிப்பாய்ந்தன. இதனால் முக்கடல் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க, சுற்றுலா போலீசார் தடை விதித்தனர்.

மீனவர்கள் மீன்பிடிக்க  செல்லவில்லை

இதுபோல், ஆரோக்கியபுரம், சின்னமுட்டம், வாவத்துறை, புதுக்கிராமம், சிலுவைநகர், கோவளம் போன்ற பகுதிகளிலும் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால், இந்த பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. மீனவர்களின் விசைப்படகுகள் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

படகு போக்குவரத்து         தாமதம்

விவேகானந்தர் மண்டபத்துக்கு காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கவில்லை. இதனால், படகுதுறையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர், காலை 10 மணிக்கு கடல் இயல்பு நிலைக்கு திரும்பியதையடுத்து 2 மணி நேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்கியது.

மேலும் செய்திகள்