பெருந்துறை அருகே, 100 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த மூதாட்டி - காயமின்றி உயிருடன் மீட்பு

பெருந்துறை அருகே 100 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த மூதாட்டி காயமின்றி உயிருடன் மீட்கப்பட்டார்.

Update: 2019-09-26 22:00 GMT
பெருந்துறை, 

பெருந்துறை- குன்னத்தூர் ரோட்டில் கிரே நகரை அடுத்து உள்ள சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் கருப்பாயி (வயது 85). இவருடைய கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு குழந்தைகள் கிடையாது. இதனால் உறவினர்களின் பராமரிப்பில் கருப்பாயி இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் நடை பயிற்சிக்காக கருப்பாயி அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு 100 அடி ஆழம் உள்ள பொதுக்கிணறு அருகில் சென்றபோது எதிர்பாராதவிதமாக அதற்குள் தவறி விழுந்து விட்டார். அந்த கிணற்றில் தண்ணீர் இல்லை. இதனால் அவர் கிணற்றுக்குள் இருந்தவாறு சத்தம் போட்டார். அவருடைய சத்தம் கேட்டு அந்த வழியாக வந்தவர்கள் கிணற்றை எட்டிப்பார்த்தனர்.

அப்போது கிணற்றுக்குள் கருப்பாயி விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இதுபற்றி பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் நிலைய அதிகாரி வேலுச்சாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நாற்காலியில் உட்கார வைத்து கயிறு மூலம் பத்திரமாக மீட்டு கிணற்றின் மேல் பகுதிக்கு கொண்டு வந்தனர். அப்போது மூதாட்டியின் உடலில் எந்தவித காயமோ, சிராய்ப்போ இல்லை.

இதற்கிடையே அவரை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ப்பதற்காக அங்கு 108 ஆம்புலன்ஸ் வந்து நின்றது. ஆனால் கருப்பாயி, ‘நான் நன்றாக இருக்கிறேன். எனக்கு எந்தவித சிகிச்சையும் தேவை இல்லை. எனவே நான் ஆஸ்பத்திரிக்கு செல்ல விரும்பவில்லை,’ என்றார். இதைத்தொடர்ந்து சிகிச்சைக்கு அழைத்து போக வந்த ஆம்புலன்ஸ் திரும்பி சென்றது.

எந்தவித காயமுமின்றி உயிருடன் மீட்கப்பட்ட மூதாட்டியை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். 

மேலும் செய்திகள்