தலையணையால் முகத்தை அமுக்கி தாயை கொன்ற கம்ப்யூட்டர் என்ஜினீயர் குடிபோதையில் வெறிச்செயல்

திருச்சியில் தலையணையால் முகத்தை அமுக்கி தாயை கொலை செய்த கம்ப்யூட்டர் என்ஜினீயரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-09-26 23:15 GMT
திருச்சி,

திருச்சி ராம்ஜிநகர் மில்காலனியை சேர்ந்தவர் ஹரிதாஸ். இவருடைய மனைவி சாந்தி (வயது 52). இவர்களுக்கு மனோன்மணி (29) என்ற மகளும், குமரவேல் (28) என்ற மகனும் உள்ளனர். குமரவேலுக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர் வீட்டின் மாடியில் மனைவியுடன் வசித்து வருகிறார். ஹரிதாஸும், சாந்தியும் கீழ் தளத்தில் வசித்து வருகிறார்கள்.

குமரவேல் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு, திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 மாதமாக அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

பணம் கேட்டு தகராறு

மேலும், குடிப்பழக்கத்துக்கு ஆளான அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து வீட்டில் பணம் கேட்டு தகராறு செய்தும் வந்துள்ளார். இதனால் தந்தை ஹரிதாஸ் குமரவேலை கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த அவர் சில நாட்களுக்கு முன்பு எலிமருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து காப்பாற்றினர்.

அதன்பிறகும் வீட்டில் அவ்வப்போது பணம் கேட்டு சண்டை போட்டு வந்தார். கடந்த 20-ந் தேதி சாந்தி குளிக்க சென்றபோது, குமரவேல் அவரது கழுத்தில் துண்டை சுற்றி நெரித்து கொலைசெய்து விடுவேன் என மிரட்டி பணம் கேட்டுள்ளார். அப்போது அவரிடம் இருந்து சாந்தியை வீட்டார் காப்பாற்றி உள்ளனர்.

அறையில் பிணமாக கிடந்தார்

இந்தநிலையில் சிலதினங்களுக்கு முன்பு ஹரிதாஸ் கண் அறுவை சிகிச்சைக்காக புதுச்சேரி சென்று விட்டார். நேற்று முன்தினம் காலை குமரவேலின் மனைவி யோகதீபா தனது தாய் வீட்டுக்கு குழந்தையை தூக்கி கொண்டு சென்று விட்டார். வீட்டில் குமரவேலும், அவரது தாய் சாந்தியும் மட்டும் இருந்துள்ளனர். சிறிது நேரத்தில் குமரவேல் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். நேற்று முன்தினம் பகல் குமரவேலின் சகோதரி மனோன்மணி தனது தாய் சாந்தியை பார்க்க வீட்டுக்கு வந்தார். ஆனால் வீடு பூட்டிக் கிடந்ததால் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தார். ஆனால் அவர் எங்கு சென்றார் என்று யாருக்கும் தெரியவில்லை.

குமரவேலிடம் விசாரித்தபோது, அவர் மார்க்கெட்டுக்கு செல்வதாக கூறி சென்றதாக தெரிவித்தார். இதையடுத்து உறவினர்கள் சாந்தியை அக்கம் பக்கத்தில் தேடினார்கள். அவர்களோடு சேர்ந்து குமரவேலும் சாந்தியை தேடினார். இரவு வரை சாந்தி வீடு திரும்பாததால் மனோன்மணிக்கு சந்தேகம் ஏற்பட்டது. நீண்ட நேரமாகியும் தனது தாயை காணாததால் அவருக்கு ஏதும் நேர்ந்து இருக்குமோ? என்று பதற்றம் அடைந்தார். உடனடியாக வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்று உறவினர்களிடம் கூறினார். இதையடுத்து உறவினர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மாடியில் உள்ள அறையில் சாந்தி பிணமாக கிடந்தார்.

தலைமறைவு

அவரது உடலை கண்ட மனோன்மணி அதிர்ச்சி அடைந்து கண்ணீர்விட்டு கதறி அழுதார். உடனே தனது தம்பி குமரவேலை தேடினார். ஆனால் அவர் அங்கிருந்து நைசாக தப்பிச் சென்று தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து அந்த பகுதியினர் எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் குமரவேல் குடிபோதையில் தனது தாய் சாந்தி முகத்தை தலையணையால் அமுக்கி கொலை செய்து இருக்கலாம் என தெரியவந்தது.

மேலும் சாந்தியின் தலையில் 2 இடங்களில் காயமும் இருந்துள்ளது. அவரை பிடித்து கீழே தள்ளியதில் தலையில் காயம் ஏற்பட்டு இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து எடலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையத்தில் மனோன்மணி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி சென்ற குமரவேலை தேடி வருகிறார்கள்.

திருச்சியில் பெற்ற தாயையே குடிபோதையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்