அரசு பஸ்சை மீண்டும் இயக்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

அரசு பஸ்சை மீண்டும் இயக்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

Update: 2019-09-26 23:00 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

நாங்கள் கடம்பத்தூர் ஒன்றியம் கொப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசித்து வருகிறோம். இந்த நிலையில் எங்கள் பகுதியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பொன்னேரியில் இருந்து திருவள்ளூர், கொப்பூர் வழியாக அரசு பஸ் ஒன்று காஞ்சீபுரத்திற்கு சென்று கொண்டிருந்தது. அதன் மூலமாக எங்கள் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், கர்ப்பிணி பெண்கள் என பலதரப்பட்ட மக்களும் எங்கள் கிராமத்தில் இருந்து திருவள்ளூர், காஞ்சீபுரம் என பல்வேறு பகுதிகளுக்கு தினந்தோறும் சென்று வந்தோம்.

ஆனால் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக அந்த அரசு பஸ் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் நாங்கள் மிகவும் அவதியுற்றுள்ளோம்.

நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க வலியுறுத்தி நாங்கள் அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுநாள் வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் கடந்த முறை எங்கள் பகுதியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திலும் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியும் எங்களுக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை. எனவே எங்கள் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பஸ்சை இயக்க வேண்டும், கூடுதல் அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் முறையிட வந்ததாக தெரிவித்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் திடீரென கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்தனர். பின்னர் பொதுமக்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்