அரூரில் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

அரூரில் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டர் மலர்விழி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Update: 2019-09-26 22:45 GMT
அரூர், 

அரூர் நகருக்கு அருகில் அமைந்துள்ள பெரிய ஏரி சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரி நிரம்புவதால் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். அதேபோல் அரூர் நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி நிரம்பினால் அதன் உபரிநீர் வெளியேறுவதற்கு பெரியார் நகர், குபேந்திரன் நகர், மஜீத் தெரு, வர்ணீஸ்வரர் கோவில் வழியாக வாணியாறு வரை ராஜகால்வாய் செல்கிறது.

ராஜகால்வாய் செல்லும் வழித்தடத்தில் அரூர் - சேலம் பிரதான சாலையில் ஒரு தனியார் திருமண மண்டபம் அருகில் சிலர் கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்களை கட்டியுள்ளனர். அதேபோல், கால்வாயில் சேதமடைந்த பிளாஸ்டிக் பொருட்களை கொட்டிவைத்து தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் ராஜகால்வாய் தூர்அடைந்து மழைநீர் மற்றும் கழிவுநீர் வெளியேற முடியாத நிலை இருந்தது. மேலும் மழைநீர் ஒரே இடத்தில் நீண்டநாள் தேங்குவதால் டெங்குநோய் பரவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து ராஜகால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், பெரிய ஏரியின் ராஜகால்வாய் செல்லும் இடத்தினை வருவாய்த்துறை சார்பில் அளவீடு (சர்வே) செய்ய வேண்டும். தொடர்ந்து கால்வாய் வழியாக மழைநீர், கழிவு நீரானது தடையின்றி செல்லும் வகையில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அரூர் பெரிய ஏரியின் கால்வாய் ஆக்கிரமிப்புகள் சுமார் 40 ஆண்டு காலமாக நீடித்து வந்த நிலையில் தற்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

இந்த ஆய்வின்போது அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்