கடலூர் சிறையில் கைதியை நிர்வாணப்படுத்தி சோதனையிடுவதை எதிர்த்து வழக்கு -உள்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்

கடலூர் சிறையில் கைதியை நிர்வாணப்படுத்தி சோதனை நடத்துவதற்கு எதிரான வழக்கில் உள்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மதுரை கீரைத்துரையைச் சேர்ந்த சோலைமதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

Update: 2019-09-26 23:00 GMT
மதுரை, 

என்னுடைய கணவர் முருகேசன் என்ற சப்பாணி முருகன் (வயது 30). இவர் மீது மதுரை, ராமநாதபுரம், சேலம், புதுக்கோட்டை மாவட்டங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஆண்டு பரமக்குடி கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை சேலம் சிறையில் அடைத்தனர். பின்னர் கடலூர் சிறைக்கு மாற்றினர்.

இந்தநிலையில் வழக்கு விசாரணைக்காக பரமக்குடி கோர்ட்டுக்கு வந்திருந்தார். அப்போது அவரை சந்தித்தேன். அவர், “சிறையில் போலீசார் அடிக்கடி என்னை நிர்வாணப்படுத்தி துன்புறுத்துகிறார்கள். மேலும், “ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?” என அதிகாரிகளிடம் கேள்வி கேட்டதற்கு, “சிறையில் கஞ்சா, செல்போன் பயன்படுத்தியதாக பொய் வழக்குப்பதிவு செய்வோம்” என்று என் கணவரை மிரட்டி உள்ளார்கள். இதனால் கடும் மனஉளைச்சலால் தவிக்கிறார்.

ஒருவரின் ஆடைகளை களைந்து சோதனை செய்வது மனித உரிமை மீறல் நடவடிக்கை. எனவே என் கணவரை நிர்வாணப்படுத்தி சோதனை நடத்தக்கூடாது என கடலூர் சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் அழகுமணி, ராஜசேகரன் ஆஜராகி, “சிறைகளில் கைதிகளை நிர்வாணப்படுத்தி சோதனை செய்வது வழக்கமாக உள்ளது. இதற்கான எந்திரங்கள் இருந்தும் அதை பயன்படுத்துவதில்லை. நிர்வாணப்படுத்துவதால் கைதிகளின் மனநிலை பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற சோதனைகளை நடத்துவதால் மனித மாண்பு கெடுகிறது, என கடந்த 1979-ம் ஆண்டிலேயே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறி உள்ளது. சோதனை செய்வதற்கு விமான நிலையங்களில் ஸ்கேனர் எந்திரத்தை பயன்படுத்தும் முறையை சிறைகளிலும் கையாளலாம். எனவே சிறைகளில் கைதிகளை நிர்வாணப்படுத்தி சோதனை நடத்தக்கூடாது, என உத்தரவிட வேண்டும்” என்று வாதாடினார்கள்.

முடிவில், இந்த மனு தொடர்பாக உள்துறை செயலாளர், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., கடலூர் சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்