மஞ்சள்பரப்பு - புல்லாவெளி இடையே மலைப்பாதையில் மரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

மஞ்சள்பரப்பு-புல்லாவெளி இடையே மலைப்பாதையில் மரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-09-27 22:00 GMT
பெரும்பாறை, 

கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளான பெரும்பாறை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, தடியன்குடிசை, மஞ்சள்பரப்பு, கொங்கப்பட்டி, புல்லாவெளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அடிக்கடி மரங்கள் சாய்ந்து விழுந்து வருகின்றன.

நேற்றும் பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதில் மஞ்சள்பரப்பு-புல்லாவெளி இடையே இலவமரம் ஒன்று வேரோடு சாய்ந்து மலைப்பாதையில் விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மலைப்பாதையின் இரு புறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும் மின்கம்பி மீது மரம் சாய்ந்ததால் புல்லாவெளி பகுதிக்கு மின்தடை ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஜோதிபாஸ் தலைமையிலான ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் எந்திரம் மூலம் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர். அதன்பின்னரே போக்குவரத்து சீரானது.

இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்