ஆயத்த ஆடை வடிவமைப்பு மையத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சி - கலெக்டர் தகவல்

ஆயத்த ஆடை வடிவமைப்பு மையத்தின் மூலம்வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. விருப்பம் உள்ள இளைஞர்கள் நேர்காணலில் பங்கேற்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-27 22:30 GMT
திருவண்ணாமலை, 

தமிழகத்தில் படித்து வேலையில்லாத சிறுபான்மை வகுப்பை சேர்ந்த இளைஞர்களுக்கு ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையத்தில் இலவச திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சிக்கு பிறகு வேலைவாய்ப்பு பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த படித்த வேலையில்லா இளைஞர்கள் பயிற்சி பெறலாம். இதில் 50 பயனாளிகளுக்கு 3 மாதம் ‘எம்பிராயிடரி’ பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மதவழி சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஜெயின் பிரிவை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மனுதாரர்கள் 18 வயதுக்கு மேல் 55 வயதுக்கு உட்பட்டவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

இப்பயிற்சியின்போது உதவித்தொகையாக ரூ.1000 அளிக்கப்படும். உண்டு உறைவிடக் கட்டணம் ஏதும் வழங்கப்பட மாட்டாது.

இதற்கான நேர்காணல் திருவள்ளூர் மாவட்டம் ஜெயா நகர், கி.வி.நாயுடு தெருவில் உள்ள ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையத்தில் வருகிற 3-ந் தேதி காலை 11 மணி முதல் நடைபெற உள்ளது.

மேற்படி திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் அசல் சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, கல்வி சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சி திட்டத்தில் சிறுபான்மையின இளைஞர்கள் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அல்லது ஆயத்த படை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மைய உதவி மண்டல மேலாளரை 938 051 3874 என்ற எண்ணிலும், சென்னையில் உள்ள தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை 044-285 148 146 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்