சேலத்தில் 320 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா - அமைச்சர் சரோஜா சீர்வரிசை வழங்கினார்

சேலத்தில் 320 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா நடந்தது. இதில் அமைச்சர் சரோஜா கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை வழங்கினார்.

Update: 2019-09-27 23:00 GMT
சேலம்,

சேலம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் கீழ் 320 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்ட இயக்குனர் கவிதா ராமு தலைமை தாங்கினார். கலெக்டர் ராமன் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தி வைத்து சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்தினார். பின்னர் விழாவில் அவர் பேசியதாவது:-

வசதி வாய்ப்பு குறைவால் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்த முடியாத குடும்பத்தில் உள்ள கர்ப்பிணிகளுக்கு இந்த வாய்ப்பும், நன்மையும் கிடைக்காமல் அவர்களின் குழந்தைகள் பாதிக்கப்பட கூடாது என்ற தொலைநோக்கு பார்வையுடன் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2012-ம் ஆண்டு சமுதாய வளைகாப்பு திட்டத்தை கொண்டு வந்தார்.

இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 4 லட்சத்து 81 ஆயிரத்து 210 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 71 ஆயிரத்து 280 கர்ப்பிணிகள் பயனடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் 3,600 கர்ப்பிணிகள் பயனடைந்துள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் குழந்தைகளின் இறப்பு விகிதம், கர்ப்பிணிகளின் இறப்பு விகிதம், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் விகிதம் மிகவும் குறைந்து தமிழகம் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, ஜி.வெங்காடஜலம், சக்திவேல், மனோன்மணி, ராஜா, வெற்றிவேல், சின்னதம்பி, மருதமுத்து, சித்ரா, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், சேலம் ஆவின் தலைவர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட திட்ட அலுவலர் பரிமளா தேவி நன்றி கூறினார்.

இந்த விழாவில் தாதகாப்பட்டியை சேர்ந்த கார்த்திகேயன் மனைவி கோகிலா கலந்து கொண்டார். கர்ப்பிணியான இவருக்கு விழாவில் திடீரென பிரசவவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்