வெளிநாடு சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழகம் முதலிடம் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேச்சு

வெளிநாடு சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்று சேலத்தில் நடந்த உலக சுற்றுலா தினவிழாவில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசினார்.

Update: 2019-09-27 23:15 GMT
சேலம்,

தமிழக சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தினவிழா சேலம் 3 ரோடு அருகே உள்ள வரலட்சுமி மகாலில் நேற்று மாலை நடந்தது. சுற்றுலாத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அபூர்வ வர்மா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ராமன், எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, ஜி.வெங்கடாஜலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்து கொண்டு பேசியதாவது:- உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் இந்தியாவில் தமிழகம் தொடர்ந்து 5 ஆண்டுகளாக முதலிடம் வகிக்கிறது. கடந்த ஆண்டு 38 கோடியே 59 லட்சம் உள்நாட்டு சுற்றுலா பயணிகளும், 60 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். பன்னாட்டு அளவில் கவரக்கூடிய ஒரு சுற்றுலா மாநிலமாக தமிழ்நாட்டை பிரபலப்படுத்துதல், தொன்று தொட்டு விளங்கும் பண்பாடு, பாரம்பரிய நினைவு சின்னங்களிலுள்ள கட்டிடக்கலையின் சிறப்புகளை காட்சிப்படுத்துதல், மாநிலத்தில் ஏற்கனவே உள்ள சுற்றுலா உள் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களில் அடிப்படை வசதிகள், இணைப்பு சாலைகள் அமைத்திட 2011-2018-ம் ஆண்டு வரை ரூ.643.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதுதவிர, தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ் மாதமான ஆடியில் 108 அம்மன் கோவில்களுக்கு செல்லும் வகையில் ஆன்மிக சுற்றுலா நடைபெறுகிறது. பக்தர்களையும், சுற்றுலா பயணிகளையும் கவரும் புதிய சுற்றுலா பயணத்திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிற்கு பெரும் அளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக உலக சுற்றுலா தினவிழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், வெளி மாநிலங்களை சேர்ந்த பல்வேறு கலைஞர்களுக்கும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பரிசுகளை வழங்கினார்.

மேலும் செய்திகள்