திருப்போரூர் அருகே ஆயுதங்களுடன் பதுங்கிய 8 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை பிரதமர் மோடி, சீன அதிபர் வருகையை சீர்குலைக்க திட்டமா?

திருப்போரூர் அருகே ஆயுதங்களுடன் பதுங்கிய 8 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-09-28 22:15 GMT
திருப்போரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த ரத்தினமங்கலம் குபேரன் கோவில் பின்புறம் பொன்னியம்மன் நகர் அருகே ஒரு வீட்டில் மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக தாழம்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர்களை பிடிக்க காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் தாழம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் தனிப்படை போலீசார் 20-க்கும் மேற்பட்டோர் அங்கு விரைந்து சென்றனர். அப்பகுதியில் பதுங்கி இருந்த 8 பேரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு பொம்மை துப்பாக்கி, 3 அரிவாள்கள் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யயப்பட்ட 8 பேரையும் தாழம்பூர் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியை சேர்ந்த சதாம் உசேன்(வயது29), அனிஸ் ரகுமான் (22), சையது சாகுல் அமித் (27), அப்துல் தொபிக்(19), சையத் அபுதாகீர் (50), ஆபித் உசேன்(23), முகமது லக்கிப் (24) மற்றும் ஒரு சிறுவன் என்பது தெரியவந்தது.

பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இதனால் மாமல்லபுரம் முழுவதையும் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில் மாமல்லபுரம் அருகே ஆயுதங்களுடன் 8 பேர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த 8 பேரும் எதற்காக இங்கு பதுங்கி இருந்தனர்? பிரதமர் மோடி, சீன அதிபர் வருகையை சீர்குலைக்க திட்டமா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்