வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி சாவு

நம்பியூர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-09-29 22:15 GMT
நம்பியூர்,

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள ஈட்டி வீரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 40). பனியன் கம்பெனி தொழிலாளி. பிரபுவும், அவருடைய நண்பர் நாகராஜ் என்பவரும் ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு மோட்டார்சைக்கிளில் சென்றனர்.

நம்பியூரை அடுத்த மூணாம்பள்ளி அருகே சென்றபோது அங்குள்ள கீழ்பவானி வாய்க்காலில் குளிக்க பிரபு விரும்பினார். இதனால் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு கீழ்பவானி வாய்க்காலில் குளிப்பதற்காக பிரபு இறங்கினார்.

ஆனால் நாகராஜ் குளிக்க செல்லவில்லை. குளித்து கொண்டிருந்த பிரபு வாய்க்காலின் ஆழமான பகுதிக்கு சென்றார். இதனால் அவர் தண்ணீரில் மூழ்க தொடங்கினார். உடனே அவர் தன்னை காப்பாற்றும்படி அபயக்குரல் எழுப்பினார்.

இதை கண்டதும் நாகராஜ் அவரை காப்பாற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை. இதனால் தண்ணீரில் மூழ்கி பிரபு இறந்தார்.

இதுகுறித்து கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் நிலைய அதிகாரி ஆறுமுகம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, 1 மணி நேரம் போராடி பிரபுவின் உடலை மீட்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் நம்பியூர் போலீசார் விரைந்து சென்று பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்