ஆடுதுறையில் 240 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா அமைச்சர் துரைக்கண்ணு பங்கேற்பு

ஆடுதுறையில் 240 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டார்.

Update: 2019-09-29 23:00 GMT
திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டார அளவில் ஆடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 240 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. திட்ட அலுவலர் ராஜ்குமார் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் க.தவமணி, ராம.ராமநாதன், திருவிடைமருதூர் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில்அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டு 240 கர்ப்பிணிகளுக்கு வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம், சேலை, வளையல் தாம்பூலம் கொண்ட சீர்வரிசை பொருட்களை தன் சொந்த செலவில் வழங்கினார். மேலும் பல வகையான உணவுகளும் வழங்கப்பட்டன.

விழாவில் அமைச்சர் பேசும் போது கூறியதாவது:-

சீர்வரிசை பொருட்கள்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் ஏற்படுத்தப்பட்ட இந்த திட்டம் தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் 2400 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு அவர்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படுகிறது. கர்ப்பிணிகள் அனைவரும் தமிழக அரசு வழங்கும் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் பி.ராஜேந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் வி.கே.பாலமுருகன், நகர செயலாளர் செல்வம், நகர அம்மா பேரவை செயலாளர் ராஜா, வட்டார மருத்துவ அலுவலர், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மற்றும் திரளான அ.தி.மு.க. பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்