360 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு சீர்வரிசை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

360 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு சீர்வரிசையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

Update: 2019-09-29 22:15 GMT
கோவை, 

கோவை பூமார்க்கெட், குனியமுத்தூர், செல்வபுரம், தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளில் சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் ராஜாமணி, வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு 360 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். அதன்பின்னர் அவர் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பெண்களுக்கும், பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் மகத்தான பல திட்டங்களை செயல்படுத்தி அவர்களின் முன்னேற்றத்திற்கு ஏணியாக விளங்கினார். சமுதாயத்தில் அனைவருக்கும் ஆரோக்கியமான நல்வாழ்வு மிகவும் அவசியம்.

பெண்களும், குழந்தைகளும் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக இருந்தால்தான் குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். இதை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் முன்னோடியான திட்டம் தான் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம். மனிதவள மேம்பாட்டின் ஆணிவேராகவும், அடித்தளமாகவும் இருப்பவர்கள் பெண்களும், குழந்தைகளும். அவர்களது நலனை பேணிக்காப்பது மிகவும் அவசிய மாகும்.

ஒரு குழந்தையின் வளர்ச்சி, கருவாக உருவான நாளிலிருந்தே ஆரம்பமாகிறது. 2 வயதை அடைவதற்கு முன் ஒரு குழந்தைக்கு ஏற்படும் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக் குறைபாட்டை சரிசெய்வது எளிதில்லை. எல்லோரும், எல்லாமும் பெற வேண்டும் என்ற நோக்கத்துடனும், ஏழை மக்களின் வாழ்க்கை தரம் உயரவும் தமிழக அரசு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

வளைகாப்பு விழாவில் கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசையுடன், 5 வகையான கலவை சாதங்களும் கர்ப்ப காலங்களில் உணவு உண்ண வேண்டும் என்பதன் அடையாளமாக வழங்கப்படுகிறது. மேலும் கர்ப்பக்கால முன், பின் பராமரிப்பு, குழந்தைக்கு உணவூட்டும் முறைகள், குழந்தை வளர்ப்பு, தடுப்பூசிகள் போன்றவை குறித்து கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த வளைகாப்பு நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் வருவாய் கோட்டாட்சியர் (தெற்கு) தனலிங்கம், மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணி) மீனாட்சி, தமிழக ஹஜ் கமிட்டி தலைவர் சி.டி.சி. ஜப்பார், வால்பாறை ஹமீது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்