விவசாய நிலங்களை ஆக்கிரமித்துள்ள சோலார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

விவசாய நிலங்களை ஆக்கிரமித்துள்ள தனியார் நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

Update: 2019-09-30 23:00 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கே.விஜயகார்த்தியேகன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது உடுமலை தாலுகா ஆமந்தகடவு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் ஊரில் 300 ஏக்கர் பரப்பளவில் தனியார் நிறுவனம் சோலார் மின்சாரம் தயாரிக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது. 300 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்து வருகிற விளைநிலங்கள் வழியாக கிராமத்திற்குள் மழைநீர் வருகிறது. இதற்கான வடிகால் வசதியினை செய்து குளங்களுக்குள் இந்த நீரை கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும்.

இங்கு தயாரிக்கப்படும் மின்சாரத்தினை கொண்டு செல்ல மின்கோபுரங்கள் அமைக்காமலும், மின்கம்பங்களை நீர்வழிபாதைகள், விவசாய நிலங்களுக்கு சொல்லுகிற பாதைகள், புறம்போக்கு ஓடைகள் வழியாக இந்த நிறுவனத்தின் தனி நபர் ஒப்பந்ததாரர் குமரபாளையத்தை சேர்ந்த ராசு மற்றும் தனியார் நிறுவனத்தினர் எந்தவித அனுமதியும் பெறாமல், ஆக்கிரமிப்பு செய்து மின்கம்பங்கள் அமைத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்கின்றனர்.

இந்த ஆக்கிரமிப்பை அகற்ற ஏற்கனவே 7 முறை மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பம் மூலமாக தெரிவித்தும், கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும், பல்வேறு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பட்டா, குடும்ப அட்டை ஆகியவற்றை அரசிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் கடந்த வாரம் பொதுமக்கள் ஈடுபட்டோம். ஆனால் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள சோலார் நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்ததாரர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆதித்தமிழர் பேரவையினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆத்துக்கிணத்துப்பட்டி கிராமத்தில் தற்போது தமிழக அரசின் விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டது. இதில் தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்யாமல் ஒருதலைபட்சமாக பயனாளிகளை தேர்வு செய்யப்பட்டது. இதில் கிராம நிர்வாக அதிகாரி, ஊராட்சி செயலாளர், கால்நடை உதவி மருத்துவர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் உள்ளூரில் உள்ள அ.தி.மு.க. பிரமுகர்களுடன் இணைந்து முறைகேடாக பயனாளிகளை தேர்வு செய்துள்ளனர்.

மேலும், விதவை பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் போன்ற நபர்களுக்கே முன்னுரிமை கொடுத்து முறைகேடாக தேர்வு செய்துள்ளனர். எனவே தகுதியான நபர்களை தேர்வு செய்து அவர்கள் அனைவருக்கும் விலையில்லா கறவை பசுக்கள் வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்