ஓ.என்.ஜி.சி. நிறுவனம் உடனடியாக வெளியேற வலியுறுத்தி உண்ணாவிரதம் 53 பேர் கைது

சோழங்கநல்லூரில் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனம் உடனடியாக வெளியேற வலியுறுத்தி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட 53 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-09-30 23:00 GMT
கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே சோழங்கநல்லூரில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் சார்பில் கிணறு அமைக்கும் பணி 4 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணியினால் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது என கூறி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் உடனடியாக ஊரை விட்டு வெளியேற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதுபற்றி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து நேற்று முதல் வருகிற 4-ந்தேதி வரை உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டம் ஆகியவற்றை கிராமமக்கள் அறிவித்தனர்.

உண்ணாவிரதம்

இந்தநிலையில் நேற்று காலை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் உடனடியாக வெளியேற வலியுறுத்தி கோட்டூர் சத்திரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து சோழங்கநல்லூர் கிராமத்திற்கு ஊர்வலமாக ஆண்கள்-பெண்கள் கையில் பதாகை ஏந்தி வந்தனர். பின்னர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி, கோட்டூர் இன்ஸ் பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட 23 பெண்கள் உள்பட 53 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது கைது செய்யப்பட்ட அனைவரும் போலீசாருக்கும், ஓ.என்.ஜி.சி.க்கும் எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் அந்தபகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்