அடுத்தடுத்து 2 பேர் தீக்குளிக்க முயற்சி; கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

சிவகங்கையில் கலெக்டர் அலுவலகத்தில் அடுத்தடுத்து 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-30 22:45 GMT
சிவகங்கை,

காளையார்கோவிலை அடுத்த மருதங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சம்பூர்ணம் (வயது 65). இவரது கணவர் இறந்துவிட்டார்.

இவருக்கு கடந்த 5 ஆண்டுக்கு முன்பு தமிழக அரசின் பசுமைவீடுகள் திட்டத்தில் வீடு வழங்கப்பட்டது. அதில் வசிக்கும் மூதாட்டி, அந்த வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கப்படாததால், பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு செய்தும் அவர்கள் கண்டு கொள்ளவில்லையாம்.

இந்தநிலையில் வீட்டில் மின்சாரம் இல்லாததால் அவதியடைந்த மூதாட்டி, நேற்று சிவகங்கையில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க மருமகள், பேத்தியுடன் வந்தார். பின்பு திடீரென அவர் தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து அவரை தடுத்து நிறுத்தி, சிவகங்கை நகர் போலீசில் ஒப்படைத்தனர் இது தொடர்பாக நகர் சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

இதேபோல நாமக்கல் மாவட்டம் படைவீடு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (39). இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். கடந்த 24-ந்தேதி இவரது லாரியில் மணல் ஏற்றி வரும் போது மானாமதுரை போலீசார் லாரியை பறிமுதல் செய்தனராம். அந்த லாரியை போலீசார் இதுவரை விடுவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ரமேஷ் நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தனது உடம்பில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தின் போது, கலெக்டர் அலுவலக வளாகத்தில் அடுத்தடுத்து 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும் செய்திகள்