வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி எடமலைப்பட்டிபுதூரில் உள்ள கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-30 23:00 GMT
திருச்சி,

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ராமச்சந்திராநகர், பஞ்சப்பூர், பிராட்டியூர், செட்டியப்பட்டி, சொக்கலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் பொதுமக்கள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு மாவட்ட கலெக்டரிடம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். பின்னர் இதே கோரிக்கையை வலியுறுத்தி எடமலைப்பட்டிபுதூர் கடைவீதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி உண்ணாவிரதம் நடைபெற்றது.

அப்போது நடந்த பேச்சுவார்த்தையில், பட்டா வழங்குவது குறித்து தாசில்தார் தலைமையில் கணக்கெடுப்பு செய்து, கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பிப்பதாக தெரிவித்து இருந்தனர். ஆனால் காலதாமதம் செய்வதை கண்டித்தும், உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் சார்பில் கிராமநிர்வாக அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர்.

முற்றுகை போராட்டம்

அதன்படி நேற்று காலை எடமலைப்பட்டிபுதூர் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் முன்பு ஏராளமானோர் மனுவுடன் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், அபிஷேகபுரம் பகுதி செயலாளர் வேலுச்சாமி ஆகியோருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அனைவரும் மனு அளித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் நேற்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்