செங்கம் அருகே, ஆழ்துளை கிணறு அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

செங்கம் அருகே ஆழ்துளை கிணறு அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-09-30 22:15 GMT
செங்கம், 

செங்கம் அருகே உள்ள பரமனந்தல் காமராஜ் நகரில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக ஊராட்சி நிர்வாகம் தரப்பில் ஏற்கனவே ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு இருந்தது. அந்த ஆழ்துளை கிணறு பழுதடைந்ததால் அதனருகே வேறொரு இடம் தேர்வு செய்யப்பட்டு அந்த இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று தேர்வு செய்யப்பட்ட இடத்தில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக எந்திரங்கள் வரவழைக்கப்பட்டது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட இடத்தின் அருகே உள்ள தனிநபர் ஒருவர் ஆழ்துளை கிணறு அமைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.

இதை அறிந்த பொதுமக்கள் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த செங்கம் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

இதைத்தொடர்ந்து ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கிய பின் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்