வெள்ளாற்றில் மணல் குவாரியை மூடக்கோரி, மாட்டுவண்டிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

திட்டக்குடி அருகே வெள்ளாற்றில் மணல் குவாரியை மூடக்கோரி மாட்டு வண்டிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-10-01 22:45 GMT
திட்டக்குடி, 

திட்டக்குடி அருகே உள்ள இளமங்கலம்- கீழ்செருவாய் இடையே வெள்ளாற்றில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியில் இருந்து தினசரி 200-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளிச் செல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மணல் குவாரியில் விதிகளை மீறி மணல் அள்ளுவதாலும், சிலர் பட்டா இடத்தில் மணல் அள்ளிச் செல்வதாலும் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்று விட்டது.

இதனால் வெள்ளாற்றின் கரையோரம் உள்ள விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய முடியாமலும், சுற்றியுள்ள 64 கிராமங்களை சேர்ந்த மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டாலும் அவதியடைந்து வருகின்றனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் மணல் அள்ளிச் செல்வதற்காக 200-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளுடன் தொழிலாளர்கள் நேற்று காலை 7.30 மணி அளவில் வெள்ளாற்றுக்கு வந்தனர். இதுபற்றி அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வெள்ளாற்றுக்கு திரண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள் வெள்ளாற்றில் விதிகளை மீறி மணல் அள்ளப்படுவதாக கூறி மாட்டு வண்டிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த திட்டக்குடி தாசில்தார் செந்தில்வேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், வெள்ளாற்றில் விதிகளை மீறி மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. அதனால் மணல் குவாரியை மூட வேண்டும் என்றனர்.

அதற்கு அதிகாரிகள், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடத்தப்பட்டு, மணல் குவாரியை மூடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றனர். இதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள், சிறைபிடித்த மாட்டுவண்டிகளை விடுவித்து, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்