ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வருவோர் விருதுநகருக்குள் நுழைய தடை - போலீசார் அதிரடி நடவடிக்கை

ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களை நகர் எல்லைகளில் நிறுத்திய போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் அவர்களை விருதுநகருக்குள் நுழைய அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர்.

Update: 2019-10-01 22:45 GMT
விருதுநகர்,

ஹெல்மெட் அணியாமலும், சாலை விதிகளை பின்பற்றாமலும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி அதிகபட்ச அபராத தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட்டு அறிவித்ததன் பேரில் போலீசாரும், போக்குவரத்துதுறை அதிகாரிகளும் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் வருவோர் மீது நடவடிக்கை எடுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இருப்பினும் இரு சக்கர வாகனங்களில் இன்னும் பெரும்பாலானோர் ஹெல்மெட் அணியாமல் வருகிற நிலை நீடிக்கிறது.

விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் அறிவுறுத்தலின் பேரில் போலீசார், ஹெல்மெட் அணிய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். போக்குவரத்து துறை அதிகாரிகளும் போலீசாருடன் இணைந்து இந்த விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று போலீசாரும், போக்குவரத்துதுறை அதிகாரிகளும் விருதுநகரில் சிவகாசி பைபாஸ் ரோடு சந்திப்பு, மதுரை ரோடு, அருப்புக்கோட்டை ரோடு, கல்லூரி சாலை, அரசு ஆஸ்பத்திரி சாலை, ரெயில்வே பீடர் ரோடு, சாத்தூர் ரோடு ஆகிய பகுதிகளில் முகாமிட்டு இருசக்கர வாகனங்களில் வருவோர் ஹெல்மெட் அணியாமல் வந்தால் அவர்களுக்கு விருதுநகருக்குள் நுழையதடை விதித்து ஹெல்மெட் அணிந்து வருமாறு திருப்பி அனுப்பினர்.

இதே போன்று நகருக்குள் இருந்து ஹெல்மெட் அணியாமல் வருவோர்களை ஹெல்மெட் அணிந்து வந்தால் தான் நகர் பகுதியில் இருந்து வெளியேற அனுமதிக்க முடியும் என்று தெரிவித்தனர்.

விருதுநகர் உதவி போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், வட்டார போக்குவரத்து அதிகாரி இளங்கோ, போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் அருள் ஆகியோர் சிவகாசி பைபாஸ் ரோடு சந்திப்பில் நின்று ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வருவோரை நிறுத்தி அவர்களிடம் ஹெல்மெட் அணியவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அவர்களை திருப்பி அனுப்பினர்.

அபராதம் ஏதும் விதிக்காமல் போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளின் இந்தநடவடிக்கை இருசக்கர வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்