ரோந்து பணியின்போது போலீசார் மீது தாக்குதல்: ரவுடிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்

ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரை தாக்கிய ரவுடிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-10-01 23:15 GMT
பாகூர்,

புதுவை காமராஜ் நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக ரவுடிகளை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர். இதையொட்டி நேற்று முன்தினம் இரவு வில்லியனூர் மெயின் ரோட்டில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் ரோந்து மேற்கொண்டனர்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த ரவுடி அய்யனார் (வயது 28), அவரது கூட்டாளிகள் ஜோசப் ராஜ், அருணாசலம் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் வண்டியை திருப்பிக்கொண்டு தப்பி ஓட முயன்றனர். இதை பார்த்ததும் போலீஸ்காரர்கள் மைக்கேல், சிவகுரு இருவரும் அவர்களை விரட்டிச்சென்றனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து ரவுடிகள் 3 பேரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ரவுடிகள் போலீசாரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர். இதில் காயமடைந்த போலீஸ்காரர்கள் 2 பேரும் கரிக்கலாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வீடு திரும்பினர்.

ரவுடிகள் மீது கரிக்கலாம்பாக்கம் போலீசார் கொலை முயற்சி (307), அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்தல், அடித்து காயப்படுத்துதல் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டன. தலைமறைவான ரவுடிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ரவுடிகளால் தாக்கப்பட்ட போலீஸ்காரர்களில் ஒருவரான சிவகுருவின் சொந்த ஊர் அபிஷேகப்பாக் கம். அவரை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி சிவகுருவின் உறவினர்கள், பொதுமக்கள் தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில் நேற்று காலை திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த தவளக்குப்பம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்துபோக செய்தனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்