சிவாஜிகணேசன் சிலைக்கு மாலை; முதல்-அமைச்சர் நாராயணசாமி மரியாதை

சிவாஜி கணேசனின் சிலைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். படத்துக்கு ரங்கசாமி மலர் தூவினார்.

Update: 2019-10-01 23:00 GMT
புதுச்சேரி,

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 91-வது பிறந்தநாள் விழா புதுவை அரசு சார்பில் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதையொட்டி கருவடிக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி கணேசனின் உருவ சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

சிலைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் சபாநாயகர் சிவக்கொழுந்து மற்றும் பலர் கலந்துகொண்டனர். மேலும் சிவாஜி, பிரபு ரசிகர் மன்றத்தினரும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

காமராஜர் சாலையில் உள்ள ரசிகர்மன்ற அலுவலகத்தில் சிவாஜிகணேசன் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. படத்துக்கு எதிர்க்கட்சி தலைவரும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவருமான ரங்கசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சிக்கு மன்ற தலைவர் மாயன் தலைமை தாங்கினார். பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் என்.எஸ்.ஜே.ஜெயபால் எம்.எல்.ஏ., மன்ற நிர்வாகிகள் செல்வம், ஓம்சக்தி ரமேஷ், சுந்தரராஜன், ஆனந்த், ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதுவை மாநில சிவாஜி பேரவை சார்பில் அண்ணசாலையில் சிவாஜி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பேரவை தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் நடந்த இந்த விழாவில் சிவா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு சிவாஜி படத்துக்கு மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் முருகன், வைத்தியநாதன், தணிகாசலம், கிருஷ்ணன், நடராஜன், இளங்கோ, பாபு, செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பிரெஞ்சிந்திய மக்கள் உரிமை கட்சி சார்பில் அதன் தலைவர் சிவராஜ் தலைமையில் சிவாஜிகணேசன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்