திண்டுக்கல், அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் மறியல்

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-10-02 22:30 GMT
சத்திரப்பட்டி, 

ஒட்டன்சத்திரம் தாலுகா வடகாடு ஊராட்சியில் பால்கடை, பெத்தேல்புரம், வண்டிப்பாதை, வடகாடு உள்ளிட்ட 15 மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சிக்கான அலுவலகம் பால்கடை கிராமத்தில் அமைந்துள்ளது. காந்தி ஜெயந்தியையொட்டி நேற்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் நடத்த ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

இதனையடுத்து நேற்று காலை வடகாடு ஊராட்சி பகுதி மக்கள், 100-க்கும் மேற்பட்டோர் பால்கடையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து, தங்களது பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பாச்சலூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதிகள் முறையாக நிறைவேற்றப்படவில்லை. இதுகுறித்து கிராமசபை கூட்டத்தில் முறையிடலாம் என்று இருந்தோம். ஆனால் கிராமசபை கூட்டம் குறித்து முறையாக பொதுமக்களுக்கு முன்னறிவிப்பு ஏதும் கொடுக்கப்படவில்லை. தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை கொண்டு கூட்டம் நடத்த ஊராட்சி நிர்வாகம் திட்டமிட்டிருந்தது என்று கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

மறியல் குறித்து தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், ஒட்டன்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இனிவருங்காலத்தில் கிராமசபை கூட்டம் குறித்து கிராம மக்களுக்கு முறையாக அறிவிக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்